This translation may not reflect the changes made since 2009-10-18 in the English original.
Please see the Translations README for information on maintaining translations of this article.
மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது
ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்
டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன.
அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள்.
பதிப்புரிமைச் சட்டம் அச்சுத் துறையோடு வளர்ந்தது. இத் துறை மிகப் பெரிய அளவில் நகலுற்பத்தி செய்வதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். மிகப் பெரிய அளவில் நகலெடுப்போரைத் தடுப்பதால் இத்தொழில்நுட்பத்திற்குப் பதிப்புரிமை பொருந்துகிறது . வாசிப்போரின் சுதந்தரத்தை இது தடை செய்து விடவில்லை. அச்சகம் எதையும் நடத்த இயலாத சாதாரண வாசகர் புத்தகங்களை பேனா மையின் துணைக் கொண்டே நகலெடுக்க முடியும். இதற்காக சிலர் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததுமுண்டு.
அச்சுத் துறையையோடு ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளைந்துக் கொடுக்க வல்லது. தகவலானது டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் பொழுது பிறரோடு பகிர்ந்துக் கொள்வது சுலபமாகிறது . வளைந்துக் கொடுக்கும் இத்தன்மையால் பதிப்புரிமைப் போன்றச் சட்டங்களுடன் இசைவது கடினமாகிறது. கொடுங்கோன்மையோடுக் கூடிய மட்டமான முறைகளைக் கையாண்டு மென்பொருளுக்கான பதிப்புரிமையை நிலைநாட்ட முயலும் முயற்சிகளுக்கு இதுவே காரணமாகிறது. . மென்பொருள் பதிப்புக் கூட்டமைப்பின் (மெ.ப.கூ) கீழ்காணும் நான்கு வழக்கங்களைக் கருத்தில் நிறுத்துங்கள்.
- தங்கள் நண்பருக்கு தாங்கள் உதவுவது உருவாக்கியவருக்கு அடிபணியாதச் செயல் என்றத் தீவிரப் பிரச்சாரம்.
- உடன் பணிபுரிவோர் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிப்பது.
- உடன் பணிபுரிவோர் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிப்பது.
- நகலெடுத்ததற்காக அல்ல மாறாக நகலெடுக்கும் வசதிகளை காக்காமலும் அதன் பயன்பாட்டைத் தடுக்காமலும் சென்றமைக்காக எம்.ஐ.டியின் டேவிட் லாமசியா போன்றோர் மீது வழக்குத் தொடுத்தமை. (மெ.ப.கூ வின் தூண்டுதலின் பெயரில் யு.எஸ் அரசு செய்தது.)
இந்நான்கு முறைகளும் முன்னாள் சோவியத் யூனியனில் நடைமுறையிலிருந்த பழக்கங்களை ஒத்திருக்கின்றன. அங்கே நகலெடுக்கும் ஒவ்வொரு கருவியும் தடைசெய்யப் பட்ட முறையில் நகலெடுப்பதை தடுக்கும் பொருட்டு காவலாளிகளைக் கொண்டிருக்கும். “ சமிசட் ” ஆக தகவலை நகலெடுத்து இரகசியமாக ஒவ்வொருவரும் கைமாற்ற வேண்டும். ஒரு சிறிய வேறுபாடுண்டு. சோவியத் யூனியனில் தகவல் கட்டுப்பாட்டின் நோக்கம் அரசியல். யு.எஸ் ஸில் இதன் நோக்கம் இலாபம். நோக்கங்களைக் காட்டிலும் செயல்களே நம்மைப் பாதிக்கின்றன. தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் ஒரேவிதமான முறைகளுக்கும் முரட்டுத் தன்மைகளுக்கும் இட்டுச் செல்கின்றன.
தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என உரிமையாளர்கள் பலக் காரணங்களை முன்வைக்கிறாரகள்:
- பெயர் சூட்டிக் கொள்ளுதல்
மக்களை ஒரு குறிப்பிட்டக் கோணத்தில் சிந்திக்க வைப்பதன் பொருட்டு “திருட்டுத்தனம்”, “போலித்தனம்” முதலிய தரம் தாழ்ந்த சொற்களையும், “அறிவுசார் சொத்து”, “சேதம்” முதலிய அறிவாளித்தனமான பதங்களையும் உரிமையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நிரல்களுக்கும் பௌதீக பொருட்களுக்கும் இடையேயுள்ள சாதாரண ஒப்புமைக் குறித்து..
திடப் பொருள் சார்ந்த சொத்து குறித்த நமது சிந்தனைகளும் கண்ணோட்டங்களும் பிறரிடமிருந்து ஒரு பொருளைக் கவர்வது சரியா என்பதைப் பற்றியது. இதனை ஒரு பொருளை நகலெடுப்பதற்கு அப்படியே பொருத்த இயலாது. ஆனால் உரிமையாளர்கள் எப்பாடுபட்டாவது அங்ஙனம் பொருத்தக் கோருகிறார்கள்.
- மிகைப்படுத்துதல்.
பயனர்கள் தாங்களாகவே நிரல்களை நகலெடுக்கும் போது, பொருளாதார இழப்புகளும் தீமைகளும் தங்களுக்கு நேருவதாக உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.ஆனால் நகலெடுப்பது உரிமையாளரின் மீது எவ்விதமான நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதும் கிடையாது, யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் கிடையாது.மாறாக நகலெடுத்த ஒருவர் உரிமையாளரிடமிருந்து நகலொன்று பெற்றமைக்காக ஏதாவதுக் கொடுத்திருந்தால் வேண்டுமாயின் உரிமையாளருக்கு இழப்பு ஏற்படலாம்.
சிறிது யோசித்துப் பார்த்தால் இத்தகைய மக்கள் நகல்களை வாங்கியிருக்க மாட்டார்கள். ஆயினும் ஒவ்வொருவரும் நகலை வாங்கியிருக்கக் கூடும் என பாவித்துக் கொண்டு உரிமையாளர்கள் அவர்களின் “நஷ்டத்தை” கணக்கெடுப்பார்கள். மிகைப் படுத்துதல் என இதனை மிகச்சாதாரணமாகச் சொல்லலாம்.
- சட்டம்.
உரிமையாளர்கள் தற்போதைய சட்டத்தின் நிலைமையையும், கிடைக்கக் கூடிய கடுமையான தண்டனைகளையும் அடிக்கடிச் சொல்லி பயமுறுத்துகிறார்கள். இவ்வணுகுமுறையில் உட்பொதிந்த விடயம் யாதெனின் இன்றையச் சட்டம் கேள்விகளுக்கப்பாற்பட்ட அறங்களை பிரதிபலிக்கின்றன என்பதே. ஆனால் அதே சமயம் இத்தண்டனைகளை இயற்கையின் நியதிகளாக யார் மீதும் குறைகூறாத படிக்கு கருதுமாறு நாம் பணிக்கப் படுகின்றோம்.
தாஜா செய்யும் இப்போக்கானது கூர்ந்த சிந்தனையின் முன் நிற்பதற்கு திராணியற்றது. பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மனம்போன பாதைகளை மீண்டும் சுமத்த முற்படுகிறது.
சரியாத் தவறா என்பதை சட்டங்கள் தீர்மானிக்காது என்பது பிள்ளைப் பாடம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பினத்தைச் சார்ந்த ஒருவர் பேருந்தின் முற்பகுதியில் அமர்வது அமேரிக்காவின் பல மாகாணங்களில் சட்டப் படி தவறாகும். ஆனால் நிறவெறிப் பிடித்தவர்கள் மாத்திரமே அப்படி உட்கார்வதை தவறெனச் சொல்லுவார்கள்.
- இயற்கை உரிமங்கள்
தாங்கள் எழுதிய நிரல்களோடு தங்களுக்கு ஏதோ சிறப்பான தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாக தங்களின் விருப்பங்களும் ஈடுபாடுகளும் மற்ற எவருடையதைக் காட்டிலும் ,ஏன் ஒட்டு மொத்த உலகத்தைக் காட்டிலும் மேலானது எனவும் இயற்றியவர்கள் உரிமைக் கோருகிறார்கள். (சொல்லப் போனால் தனி நபர்களைக் காட்டிலும் நிறுவனங்களே மென்பொருட்களின் மீது பதிப்புரிமைக் கொள்கின்றன. இம் மாறுபாட்டைப் புறந்தள்ள நாம் எதிர்பார்க்கப் படுகிறோம்.)
தங்களைக் காட்டிலும் இயற்றியவரே மேலானவர் என்றும் இதனை அறத்தின் கூற்றாகவும் தாங்கள் சொன்னால், பிரபலமான நிரலாளராகக் கருதப் படும் நான் உங்களுக்கு இதைப் புதைகுழி என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாக இரண்டு காரணங்களுக்காக மக்கள் இயற்கையான உரிமங்களின் மீதான கோரிக்கைகளுக்கு அனுதாபம் கொண்டு விளங்குகிறார்கள்.
புலன் நுகர் பொருட்களொடு மிகையாக ஒப்பு நோக்குவது இதற்கான முதற் காரணம். நான் ஸ்பகெட்டி சமைத்தால், இன்னொருவர் அதை சாப்பிட்டால், என்னால் அதைச் சாப்பிட முடியாத காரணத்தால், நிச்சயம் எதிர்ப்பேன். அவருடைய செயல் அவருக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறதோ அதே அளவு எமக்கு பாதகமாகவும் அமைகிறது.ஆக எங்களில் ஒருவர் தான் ஸ்பகட்டியை சாப்பிட முடியும். என்ன செய்ய? தார்மீக சமன்பாட்டை அடைய எங்களுக்குள் இருக்கும் சிறு வேறுபாடு போதுமானது.
நான் எழுதிய நிரலொன்றை தாங்கள் இயக்குவதும் மாற்றுவதும் தங்களை நேரடியாகவும் என்னை மறைமுகமாகவும் தான் பாதிக்கின்றன. அதன் நகலொன்றை தாங்கள் தங்கள் நண்பரொருவருக்குத் தருவதென்பது என்னை பாதிப்பதைக் காட்டிலும் தங்களையும் தங்கள் நண்பரையுமே அதிகமாக பாதிக்கின்றது. இதைச் செய்யக் கூடாதென்று தங்களைச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை. யாருக்கும் தான்.
இரண்டாவது காரணம் இயற்றியவர்களுக்கான இயற்கை உரிமமென்பது ஏற்கப்பட்ட, கேள்விகளுக்கப்பாற்பட்ட நமது சமூகப் பாரம்பரியம் என மக்களுக்கு புகட்டப் பட்டுள்ளது.
வரலாற்றைப் பார்த்தல் இதன் மறுபக்கமே உண்மையாகும். யு.எஸ் ஸின் அரசியல் சாசனம் இயற்றப் பட்ட போது இயற்கை உரிமங்கள் குறித்த சிந்தனைகள் பரிந்துரைக்கப் பட்டு உறுதியாக நிராகரிக்கவும் பட்டன. அதனால் தான் அரசியல் சாசனமானது பதிப்புரிமை முறையைத் தேவையானதாகக் கொள்ளாது அம்முறைக்குஅனுமதி மட்டும் வழங்குகிறது.அதனால் தான் பதிப்புரிமையை தற்காலிகமானதாகப் பகற்கிறது. பதிப்புரிமையின் நோக்கம் முன்னேற்றம் காணவேயன்றி இயற்றியவர்களுக்கு பரிசளிப்பதல்ல எனவும் சொல்கிறது. பதிப்புரிமை இயற்றியோருக்குச் சிறிய அளவிலும் பதிப்பிப்போருக்குப் பெரிய அளவிலும் பயனளிக்கிறது.
நமது சமூகத்தின் நிரூபிக்கப் பட்ட மரபோ பதிப்புரிமை பொது மக்களின் இயற்கை உரிமங்களுக்கு தடை விதிக்கின்றது என்பதேயாகும். மேலும் இது பொது மக்களின் பொருட்டு மட்டுமே நியாயப் படுத்த வல்லது.
- பொருளாதாரம்.
இது மென்பொருட்கள் உற்பத்திக்கு மென்மேலும் வித்திடும் என்பதே மென்பொருட்கள் உரிமையாளர்களைக் கொண்டிருக்கலாம் என்பதற்கு கடைசியாக முன் வைக்கப்படும் வாதம்.
மற்றவைகளோடு ஒப்பிடுகையில் இவ்வாதம் சற்றே உருப்படியான அணுகுமுறையைக் கொண்டு விளங்குகிறது. மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்களைத் திருப்தி படுத்தவேண்டும் எனும் ஏற்கத் தக்க ஒரு இலக்கினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதிகமான சம்பளம் கொடுக்கப் பட்டால் அங்ஙனம் கொடுக்கப்படுகிற காரணத்தால் மக்கள் அதிகமாக உருவாக்குவார்கள் என்பது அனுபவப் பூர்வமாகத் தெளிவாகிறது.
ஆனால் இப்பொருளாதாரக் கூற்றும் தன்னிடத்தே ஒரு குறையைக் கொண்டு விளங்குகிறது. அது நாம் எவ்வளவு விலைக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுதான் வேறுபாடு எனும் அனுமானத்தை ஒட்டி அமைகிறது.“மென்பொருள் உற்பத்தியினையே” நாம் வேண்டுகிறோம் என்றும், உரிமையாளர்களைக் கொண்டிருக்கின்றதா இல்லையா என்பதைப் பற்றி அல்ல என்றும் அது அனுமானம் கொள்கிறது.
புலன் நுகர் பொருட்களுடனான தமது அனுபவங்களுடன் ஒத்துப் போவதன் காரணமாக மக்களும் இவ்வனுமானங்களை உடனே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். ஒரு சான்ட்விச்சினை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். தங்களால் மற்றுமொரு சான்ட்விச்சினை இலவசமாகவோ அல்லது விலைக்கோ பெற்றுக் கொள்ள இயலும். அப்படி இருக்குமாயின் தாங்கள் கொடுக்கும் விலை மாத்திரமே வித்தியாசம். தாங்கள் அதை விலைக் கொடுத்து வாங்குகிறீர்களோ இல்லையோ, சான்ட்விச்சின் சுவையும் அதிலுள்ள புரதச் சத்தும் ஒன்றாகவே இருக்கப்போகின்றன. மேலும் இவ்விரு தருணங்களிலும் தங்களால் அதனை ஒரு முறை மாத்திரமே புசிக்க இயலும். சான்ட்விச்சினைத் தாங்கள் ஒரு உரிமையாளரிடமிருந்து பெற்றீர்களா இல்லையா என்பது கடைசியில் தங்கள் கையில் தங்கப் போகும் காசைத் தவிர வேறெந்த நேரடி பாதிப்பையும் எற்படுத்தப் போவதில்லை.
எந்தவொரு புலன் நுகர் பொருளுக்கும் இது பொருந்தும். அதற்கு உரிமையாளர் ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பது அது எத்தன்மையது என்பதையோ அதை வாங்குகிற காரணத்தால் அதைக் கொண்டு தாங்கள் என்ன செய்ய இயலும் என்பதையோ நேரடியாக பாதிக்காது.
ஆனால் அதுவே நிரலொன்றுக்கு உரிமையாளரொருவர் இருக்கிறாரென்றால் , அது எத்தன்மையது என்பதும் அதன் நகலொன்றை வாங்குவதன் மூலம் தாங்கள் என்ன செய்யலாம் என்பதும் பாதிப்புக்குள்ளாகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம் பணம் மாத்திரம் மட்டுமல்ல. மென்பொருளுக்கு உரிமையாளர்களைக் கொண்டிருக்கும் முறையானது, மென்பொருள் உரிமையாளர்களை, சமுதாயத்துக்கு உண்மையாகவே அவசியமற்ற மென்பொருட்களை உருவாக்கவும் ஊக்குவிக்கின்றது. சிந்தைக்குள் சிக்காது அறத்துக்கு களங்கம் விளைவிப்பதால் இது நம் அனைவரையும் பாதிக்கின்றது.
சமூகத்தின் தேவைதான் என்ன? தமது குடிமக்களுக்கு உண்மையாகவே கிடைக்கக் கூடியத் தகவல்கள் வேண்டும். உதாரணத்திற்கு இயக்க மட்டுமல்லாது கற்க, வழுநீக்க, ஏற்று மேம்படுத்த வல்ல நிரல்கள் தேவை. ஆனால் மென்பொருட்களின் உரிமையாளர்கள் தருவதென்னவோ நம்மால் கற்கவும் மாற்றவும் இயலாத ஒரு கருப்புப் பெட்டி.
சமூகத்திற்கு விடுதலையும் தேவைப் படுகிறது. நிரலொன்றுக்கு உரிமையாளரிருந்தால் பயனர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியைத் தாங்களே கட்டுப் படுத்தும் விடுதலையை இழக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமூகமானது தமது குடிகளிடையே பரஸ்பரம் ஒத்துழைத்து வாழக் கூடிய சிந்தனை வளர ஊக்குவிக்க வேண்டும். மென்பொருளின் உரிமையாளர்கள் இயற்கையாக நாம் நமது சுற்றத்தாருக்கு உதவுவதை “போலித்தனம்” எனப் பகன்றால் அது நமது சமூகத்தின் குடிமை இயல்பையேக் களங்கப் படுத்துவதாகும்.
ஆகையால் தான் நாங்கள் கட்டற்ற மென்பொருள் என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை அடிப்படையாகக் கொண்டது என்கிறோம்.
உரிமையாளர்களின் பொருளாதாரக் கூற்று வழுவுடையது ஆனால் பொருளாதார பிரச்சனை என்னவோ உண்மைதான். சிலர் மென்பொருள் இயற்றுவதை சுகமாகக் கருதுவதன் காரணமாகவோ அல்லது அதன் மீதுள்ள ஈடுபாடு மற்றும் விருப்பத்தின் காரணமாகவோ மென்பொருள் இயற்றுகிறார்கள். ஆனால் மென்மேலும் மென்பொருட்கள் வளர வேண்டுமாயின் நாம் நிதிகள் திரட்ட வேண்டும்.
பத்து ஆண்டுகளாக , கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவோர் நிதி திரட்டுவதற்கான பல்வேறு முறைகளைக் கையாண்டு சில வெற்றியும் பெற்றுள்ளார்கள். யாரையும் பணக்காரர்களாக்கும் அவசியம் எதுவும் இல்லை. ஒரு சராசரி யு.எஸ் குடும்பத்தின் வருமானம் சுமார் 35 ஆயிரம் டாலர். இதுவே நிரலெழுதுவதைவிட குறைந்த திருப்தி அளிக்கக் கூடிய பெரும்பாலான பணிகளுக்கு போதுமான ஊக்கத் தொகையாக நிரூபணமாகியுள்ளது.
பரிவுத் தொகை அவசியமற்றதாக்கிய வரையில், பல வருடங்களுக்கு , நான் இயற்றிய கட்டற்ற மென்பொருளை மேம்படுத்தியதால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்ந்து வந்தேன். ஒவ்வொரு மேம்பாடும் நிலையான வெளியீட்டோடு சேர்க்கப் பட்டமையால் இறுதியில் பொதுமக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமைந்தது. இல்லையெனில் முக்கியம் வாய்ந்ததாக எமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்யாது, நுகர்வோர் விரும்பிய மேம்பாடுகளை நிறைவேற்றியமைக்காக எமக்கு நிதியளித்தார்கள்.
ஆதரவுப் பணிகளை மேற்கொள்வதன் மூலமாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கும் சிலர் சம்பாதிக்கின்றனர். (இக்கட்டுரை எழுதப் பட்ட போது) ஏறத்தாழ ஐம்பது பணியாளர்களைக் கொண்ட சைக்னஸ் சப்போர்ட், தமது பணியாளர்களின் 15% பணிகள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குவது எனக் கணக்கிடுகிறது. இது மென்பொருள் நிறுவனமொன்றில் மதிக்கத் தக்க பங்காகும்.
இன்டல், மோடோரோலா, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் அனலாக் டிவைசஸ் போன்ற நிறுவனங்களும் சி நிரலாக்கத்திற்கான குனு ஒடுக்கியின் தொடர்ச்சியான உருவாக்கத்திற்கு நிதியளிக்க ஒன்றிணைந்துள்ளார்கள். அதே சமயம் அடா மொழியின் குனு ஒடுக்கிக்கு யு.எஸ் விமானப் படை நிதியளிக்கிறது. அதிக தரமுடைய நிதி சேமிக்கக் கூடிய ஒடுக்கியை உருவாக்க இதுவே உகந்த முறையென்று அது கருதுகிறது. [சில காலங்களுக்கு முன்னர் வீமானப் படையின் நிதியளிப்பு நிறைவடைந்தது. தற்போது குனு அடா ஒடுக்கி பயன்பாட்டிலுள்ளது. அதன் பராமரிப்புக்கான நிதி வணிக ரீதியில் சேர்க்கப் படுகின்றது.]
இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலான உதாரணங்களே. கட்டற்ற மென்பொருளியக்கம் இன்னும் சிறிய அளவிலேயே இளமையுடன் இருக்கின்றது. இந்நாட்டில் (யு.எஸ்) கேட்போருடன் கூடிய வானொலியின் எடுத்துக் காட்டானது பயனர்களைக் கட்டாயப் படுத்தி பணம் வசூலிக்காது இன்னும் பலச் செயலை ஆதரிக்க இயலும் எனவும் காட்டுகிறது.
கணினியினைப் பயன்படுத்தும் ஒருவராக தாங்கள் ஒரு தனியுரிம மென்பொருளைப் பயன்படுத்தலாம். தங்களின் நண்பரொருவர் நகலொன்றை கேட்டால் முடியாது என மறுப்பது தவறாகிவிடும். பதிப்புரிமையினைக் காட்டிலும் ஒத்துழைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரை மறைவான நெருக்கமான ஒத்துழைப்பென்பது நல்லதொரு சமூகத்திற்கு வித்திடாது. தனி நபரொருவர் நேர்மையானதொரு வாழ்வினை பொதுப்படையாக பெருமையுடன் மேற்கொள்ள விழைய வேண்டும். இதன் அர்த்தம் யாதெனின் தனியுரிம மென்பொருட்களை “வேண்டாம்” என்று சொல்வதே.
மென்பொருளைப் பயன்படுத்தும் ஏனைய பயனர்களுடன் திறந்த மனதோடும் விடுதலையுணர்வோடும் ஒத்துழைக்கத் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் பணி செய்யும் முறையினைக் கற்கும் ஆற்றல் கொள்ளவும், தங்களின் மாணாக்கருக்கு கற்று கொடுக்கவும் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் பழுதாகும் போது தாங்கள் விரும்பும் நிரலாளரைக் கொண்டு அதனை சரி செய்ய தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள்.
கட்டற்ற மென்பொருள் தங்களின் உரிமை.
கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட கட்டுரைகள் ஆவணத்தில் இக்கட்டுரை பதிப்பிக்கப் பட்டுள்ளது.