சாக்லேட் கப்பல் பார்த்திருக்கின்றீர்களா.
இல்லாவிட்டால் அதைப் பார்க்க நீங்கள் ஜெர்மனி கோலோன் நகரின் ரைன் நதிக்கரைக்குத்தான் ( RHEINAUHAFEN) வரவேண்டும் . ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இதைப் பார்க்கச் செல்ல பல்வேறு வாகனங்களுக்கு வழி கொடுத்துள்ளார்கள். போட் என வித்யாசப் பயணமும் உண்டு. ஆனால் அங்கே மினி ரிக்ஷாவில் சிலர் வந்திறங்கியது கவர்ச்சிகரமாய் இருந்தது :) நாங்கள் (எங்கள் மகன் வீடு இருக்கும் ) டூயிஸ்பர்க்கிலிருந்து ட்ராம், மெட்ரோ ட்ரெயின் & பஸ்ஸில் போனோம்.
உலோகத் தரை, கண்ணாடிச் சுவரால் அமைக்கப்பட்ட மிக அழகான இந்த சாக்லேட் கப்பலில் சாக்லேட் மியூசியம்,சாக்லேட் ஷாப், சாக்லேட் தயாரிக்கும் முறை, 5000 வருடப் புராதன சாக்லேட்டின் வரலாறு, சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுகள், பிரபல ப்ராண்டுகளின் சாக்லேட், சாக்லேட் தயாரிப்பின் பூர்வீகம், சாக்லேட் தயாரிப்பவரின் குடும்ப விவரம்,கோகோ பீன்ஸில் இருந்து தயாரிப்பது முதல் இன்றைய ப்ளாக் சாக்லேட் வரை விதம் விதமான சாக்லேட் வகைகளைக் காணலாம். கேட்கும்போதே நாவூறுகிறதல்லவா !
நெஸ்லே,லிண்ட் சாக்லேட்டுகள் என உலகத் தரம் மிகுந்த சாக்லேட்டுகள் தயாராகின்றன.