மந்தரையின்
வடிவில் வந்த விதி :-
நாளை விடிந்தால் பட்டாபிஷேகம். இளவல் ராமன் முடி
சூடப் போகிறான். ஆனால் அதற்குள் இதென்ன கோலம் ? அவனது பிரியத்துக்குரிய சிற்றன்னை
கைகேயி அவனைக் காட்டுக்குப் போகச் சொல்கிறாளே. என்ன நிகழ்ந்தது. ராமன் செய்த
குற்றம் என்ன என்று போய்ப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
வீடெல்லாம் மாவிலைத் தோரணங்கள். மாக்கோலங்கள். விளக்கு அலங்காரங்கள். சாதாரண
குடிமக்களின் இல்லமே ஜொலிக்கும்போது பட்டாபிஷேகம் நடக்கப்போகும் அரண்மனை
ஜொலிக்காதா என்ன.. அதுவும் ஜாஜ்வல்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அகிலும்
சாம்பிராணியும் தூபமும் வேறு மணமூட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த அரண்மனையில்
கூனி ஒருத்தியின் இதயமும் கூனலாக இருண்ட எண்ணங்களோடு இருந்தது.