எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செட்டிநாட்டு வீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செட்டிநாட்டு வீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜூன், 2019

காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.

இது மட்டும் காரைக்குடியில் உள்ள வீடு. மற்றவை கானாடுகாத்தானில் உள்ள வீடுகள். 

தற்போதுதான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ்த்தளம் மட்டும். நிலைக்கு மேலே உள்ள சிற்பத்தொகுதியைப் பாருங்கள். கண்கவர் காட்சி. 

திருவாச்சியின் கீழ் தாமரையில் பொலியும் கஜலெக்ஷ்மி. பக்கத்தில் இரு பணிப்பெண்கள் சாமரம் வீச மேலே எட்டுக் காவல் பெண்கள் நிற்பது கொள்ளை அழகு. இவர்கள் போக மேங்கோப்பின் இருபுறமும் பெண் தெய்வங்கள் காவல் காக்கிறார்கள். 

இடி மின்னல் தாக்காமலிருக்க வீட்டின் மேலேயே கோபுரங்களில் இருப்பது போல் சாணி, வரகு, சாமை தாங்கிய இடிதாங்கிக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. 



ஞாயிறு, 8 ஜூலை, 2018

பழம்பெரும் வீடுகள்.

கானாடுகாத்தானில் மட்டுமல்ல பல்வேறு ஊர்களிலும் 941* பழம்பெரும் வீடுகள் பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகின்றன. அவற்றை எல்லாம் பாதுகாத்து ஆவணப்படுத்தலாம். அதோடு யாரும் வசிக்காததாலே அவை பாழ்படுகின்றன. அவற்றுக்கும் ஆன்மா இருக்கிறது. வயதான பெற்றோர் போலத் தனித்திருக்கிறது வீடு. அவற்றைப் புதுப்பித்து ஹெரிட்டேஜ் ஹோம்களாக மாற்றலாம்.
இந்த வீட்டில் காலிங் பெல் மிகப் பழமையானது. :)

வெள்ளி, 15 ஜூன், 2018

செட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.

மேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும்   கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவாயில்களையும் அரசர்கள் ஆளும் கோட்டைகளில் மட்டுமல்ல. நகரத்தார்கள் வாழும் நாட்டுக்கோட்டையிலும் காணலாம்.மியான்மரின் ஷ்வேனந்தா மடாலயத்தின் தேக்குமரச்சிற்பக் கலைபோன்ற தொகுப்புச் சிற்ப வேலைப்பாடுகளை ஒவ்வொரு இல்லத்தின் நிலைக்கதவிலும் நாம் கண்டு களிக்க முடியும்.   

செட்டிநாட்டு இல்லங்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தாலும்  இந்தோ இஸ்லாமிய வேலைப்பாடுகளாலும் அழகு பொலிபவை.   வீடுகளின் நுழைவாயில்களில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் நிலைவாயில்களிலும் அவர்கள் சிற்பமாய் அரசோச்சுவதும் காட்சிக்கு விருந்தாகும். இப்படியாகப்பட்ட கோட்டைபோன்ற வீடுகளின் இன்றைய நிலை என்ன ?


தமிழ்நாட்டின் மேம்பட்ட நகர்ப்புறக் கட்டிடக்கலைக்கு சாட்சியமாய் எஞ்சி இருப்பது செட்டிநாட்டின் பாரம்பர்ய இல்லங்களே. மற்ற மாவட்டங்களில் உள்ள பாரம்பர்ய இல்லங்கள் பொருளாதாரக் காரணங்களால் நலிவுற்றும் நில விற்பனைக்கு இரையாகியும் வருகின்றன. சொல்லப்போனால் எழுபது ஆண்டுகளுக்கு முன், மியான்மர் மற்றும் மலேயாவின் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டுவிக்கச் சென்ற செட்டிநாட்டினரும் சந்திக்க நேரிட்டது.

சனி, 5 மே, 2018

கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.

கானாடுகாத்தானில் கம்பீரமாக இன்றும் நிற்கும் வீடொன்றின் முன்புறம். நன்றாக 931 * மராமத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பழமையின் விரிசல்கள். மிக உயரமான வீடுகள் என்பதால் 932* இடிதாங்கும் கலசங்கள் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பல கலசங்கள் கவின்மிகுஎழிலோடு காட்சி அளிக்கும்.

கீழே வீட்டின் பக்கவாட்டில் அரக்குநிறத்தில் காணப்படுவதுதான் 933 * செம்புறாங்கற்கள். இவை வீட்டின் அடித்தளம் அமைக்கப் பயன்படுகின்றன. இந்த செம்புறாங்கற்கள் பாறையாக இருக்கும். இவை செவ்வக வடிவில் வெட்டப்பட்டு பதிக்கப்படுகின்றன. பூமியின் கீழே எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனால் மேற்புறம் ஐந்து அடி உயரமாவது பதிக்கப்பட்டிருக்கும். வீட்டின் உள்புறத்தில் இந்த இடத்தில்தான் தரைத்தளம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதுவரை அடித்தளமே. மேலும் ஒவ்வொரு வீடும் பத்து படி அளவு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் வீடுகளைக் கடல் கொண்ட காரணத்தால் இங்கே வீடுகளை இவ்வளவு உயரத்தில் அமைத்து இருக்கிறார்கள்.
இந்த வீடும் கானாடுகாத்தானில் உள்ளதே. ஒரு 934* அனுவல்சமயம் எடுத்தேன். இரட்டைத் தூண்கள்.  ஆறு ஜோடித் தூண்கள் உள்ளன. இரண்டு பக்கமும் முன் கோப்பான மேல்மாடி அறைகள். பக்கவாட்டில் பார்த்தால் தெரியும் செம்புறாங்கற்களின் அடுக்கை.இங்கே அவை ஆறடி உயரம் இருக்கின்றன. மேலும் கெட்டியான சிமிண்டினால் பூசப்பட்டிருக்கின்றன.

வியாழன், 28 டிசம்பர், 2017

கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.

வீடுகள் கட்டுமானத்தில் செட்டிநாட்டுக் கட்டுமானத்தை மிஞ்ச முடியாது. இங்கே செட்டிநாடு என்றால் கானாடுகாத்தான் மட்டுமல்ல. அதைச் சுற்றியுள்ள 72 ஊர்களும்தான்.கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீடுகளும் சில இருக்கலாம். எல்லாம் 901* தேக்குமரம் வைத்து இழைத்துக் கட்டப்பட்டவை. 


அவரவர் ஐயாக்கள் கொண்டுவித்துக் கொண்டு வந்த பர்மா தேக்கினால் கடையப்பட்டவை. ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட பத்தடி உயரம் வரை 902* செம்புறாங்கற்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மேல் வீடு எழுப்பப்பட்டிருக்கும்.


அந்தக் காலத்திலேயே இரண்டு மாடி உள்ளவை. மேல் மாடிகளை சாமான் போடும் அறையாக உபயோகப்படுத்துவார்கள்.  கல்யாணத்துக்குச் சாமான் பரப்பும் கூடமும் கூட அந்த மேல்மாடி ஹாலாகத்தான் இருக்கும். 


சில வீடுகளில் புது மணத் தம்பதிகளின் முதலிரவுக்கும், அவர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கான படுக்கை அறை, சாமான் அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும். 


இது ராஜா வீடு. கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவிலிலிருந்து புகைப்படம் எடுத்தேன். எத்தனை கோணத்தில் பார்த்தாலும் யானை, மழை, வானவில், கடல் , குழந்தை போல பரவசமூட்டக்கூடியது இந்த வீடு.

அதன் பக்கவாட்டு வீடுகளும் இடம்பெற்றுள்ளன. எங்கூராக்கும். 

வியாழன், 19 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி  போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.

210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் )  - என்றாலும் 211. முருகனுக்காக  கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.

ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!

இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம்.  அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.

திங்கள், 9 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

காரைக்குடி வீடுகளில் இம்மாதிரியான 202. ஓவியப் படங்களைக் காணமுடியும். கிருஷ்ணர் ராதை , குழந்தைகள் அம்மாக்கள், தேவதைகள் கண்ணுக்கு விருந்தாய் பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஆனா இது 203. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான கால கட்டத்தில் நிகழ்ந்திருக்கும்னு தோணுது. ஏனெனில் பெரும்பாலான ( கிருஷ்ணர் ராதை, புராண இதிகாச சம்பவங்கள் தவிர ) ஆங்கில மாதுக்களும் அவர்களின் அழகு ( அம்மண ! ) குழந்தைகளும் தோட்டத்தில் அல்லது மரத்தைச் சுற்றி ஆடும் படங்கள்தான்.
மேலே பாருங்க என்னா சேட்டை என்னா சேட்டை. ரெண்டு பயலுக அந்தர் பல்டி அடிக்கிறானுங்க ரெண்டு பேர் கை கோர்த்து தட்டாமாலை சுத்துறானுங்க. வீட்டுல வைச்சு மேய்க்க முடியலன்னு தோட்டத்துக்கோ மரத்தடிக்கோ தள்ளிட்டு வந்துட்டாங்க போல அம்மாக்கள். ஆனா பாருங்க எல்லாம் ஒன்னு ரெண்டுல்ல கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் குழந்தைகள். !
ஆனா அம்மாக்கள் இருவர்தான். ஒருவர் கைக்குழந்தை தேவதையை முத்தாடுகிறார். அவரின் முழங்காலைப் பற்றி தன்னைக் கொஞ்சமாட்டாரன்னு ஒன்னு பார்த்துட்டு இருக்கு. இன்னொருவரின் உடைக்குள் முகத்தை மூடிப் பொதித்துக் கொள்கிறது குழந்தை. அந்த அம்மா கையில் ஒரு தோல் குடுவை. மரத்தின் பீடத்தின் மேல் நிற்கும் இரண்டு குட்டி வாண்டுகள் கீழே நிற்கும் குழந்தை மேல் தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றன. ! பூக்களால் கட்டப்பட்ட கயிறை வைத்து ஸ்கிப்பிங்க் போல ஒரு ஆட்டம் வேறு நிகழ்கிறது அந்தப் பக்கம்.

திங்கள், 2 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

191. இது நிலைக்கதவில் உள்ள அமைப்பு. கைப்பிடி பாருங்கள். கோயில் கதவு போலக் கதவும் முரட்டுக் கைப்பிடியும். வார்ப்பிரும்பா பித்தளையா தெரியவில்லை. ஆனா  பாலிஷ் செய்தா மஞ்சள் கலரில் தங்க வண்ணத்தில் ( பெயிண்ட் :) ஜொலிக்கும். அதில் கோட்டைகளில் இருப்பது போன்ற கெட்டி குமிழ்கள். இது போன்ற அமைப்பை கோல்கொண்டா போன்ற கோட்டைகளில் கோட்டைக் கதவுகளில் பார்த்திருக்கிறேன். யானை வந்து முட்டினால் காயம் படும். அதுக்காக அங்கே அமைக்கப்பட்டிருக்கும். இங்கே வீடுகள் கோட்டை போல இருப்பதால் இம்மாதிரி அமைத்திருக்கலாம். ஆனால் இது முகப்பின் உள்ளே உள்ள நிலைக்கதவு. பட்டாலைக்குச் செல்லும் நிலைவாயில்.
இது வலது பக்க கொண்டி. சாவியின் துவாரமும் பெரிதாக இருக்கு. சாவிகள் எல்லாம் 192. கோயில் சாவிகள் போல இரண்டு கைகளாலும் பிடித்துத் திறக்கணும். ஊருக்கு வந்துட்டுப் போனா ரெண்டு நாளைக்கு நடு விரலும் மோதிர விரலும் சேருமிடம் வலிக்கும். கதவைத் திறந்து பூட்டி கன்னிப் போயிடும். :)  அந்தப் பித்தளை கொண்டி இருக்கும் இடத்தில் எத்தனை அடுக்காய் மரச் சதுரங்கள். அதன் கீழேயே எத்தனை அடுக்காய் சதுரங்கள். இவற்றை எப்படி சிதைவடையாமல் செதுக்கினார்கள் என ஆச்சர்யப்பட்டதுண்டு. !

வியாழன், 15 அக்டோபர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ..

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

காரைக்குடி வீடுகள் தேக்குமரக் கதவுகள், சிற்ப வேலைப்பாடுகள் , ஆத்தங்குடி/இத்தாலியன் மார்பிள்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், வடிவழகோடு அமைக்கப்பட்ட பித்தளைத் தாழ்வாரங்கள், மரச் செதுக்கல்கள், ப்ளாச்சுகள் இவற்றோடு ரசிக்க வேண்டிய இன்னொரு அம்சம் அதன் 182. ஓவியங்கள்.

சுவற்றில் மேலே வரந்தையாக  மற்றும் வாசல் நிலைகளில் ,ஜன்னல் நிலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சரித்திர இதிகாச புராண முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் வாழ்வியல் நிகழ்வுகள், யோகா, தியானம், வாழ்வியல் இச்சை, விலங்குகள், பூக்கள், பறவைகள், தெய்வத் திரு உருவங்கள் போன்றவையும் இடம் பெறும்.

183. வசிஷ்டரும் காமதேனுவும். :-

இங்கே வசிஷ்டரும் காமதேனுவும் ஹோமத்தின் முன்னால். ஒரு வனமே கண்முன் விரிகிறதல்லவா. காமதேனுவிடம் பாலருந்தும் நந்தினி கன்றுக் குட்டியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.



184/ தனலெக்ஷ்மி :-

புதன், 30 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.


173. மாட மாளிகை கூட கோபுரம் என்பார்களே அதைப் போன்ற வீடுகள் கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஆகிய ஊர்களில் பார்க்கலாம். இது காரைக்குடியில் எடுத்ததுதான். மாடியில் 174. இரட்டைத் தூண்கள் கொண்ட வளைவு எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏதோ அரசர் அங்கே காட்சி தந்து ஆணை பிறப்பிக்கப் போகிறாரோ என எண்ணும்படி இருக்கிறது இந்த வீட்டின் அமைப்பு :)

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

முகப்பில் மட்டுமல்ல மாடியிலும் மிக அழகான ஆர்ச்சுகளோடு கட்டப்பட்ட வீடு இது. வாயிலுக்கு இரு பக்கமும் இரு அறைகள் நீண்டு அமைக்கப்பட்டிருப்பது அழகு.  வீட்டிற்கு வெளிச்சுவரிலும் தெரிகின்றாற்போல  தூண்கள்  அமைக்கப்பட்டிருப்பது வித்யாசம். அதன் மேல் உள்ள பாரபட் வால் போன்ற அமைப்பு நுணுக்கத்தோடு மழை நீர் விழும் வசதிகளோடு கட்டப்பட்டிருக்கு. காம்பவுண்டு சுவரிலும் வளையமாக டிசைன் செய்திருக்கின்றார்கள்.



ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7

153. வண்ண ஜன்னல் கதவுகள். ஜன்னலுக்கு மேல் உள்ள இடத்தில் ஒரு ஓவியம் இருந்திருக்கும். அதை புதுப்பிக்கும்போது பெயிண்ட் செய்ததால் மறைந்துவிட்டது. வளைவில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் காற்றோட்டம் வேண்டும் என்பதால் இப்படி அமைத்திருக்கிறார்கள் . தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இரும்புக் கம்பிகளுக்கு சில்வர் வார்னிஷ் அடித்து  வலையும் போட்டிருக்கிறது .


வியாழன், 3 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

காரைக்குடிப்பக்க வீடுகள் 147. மூன்று கட்டு கொண்டவை முகப்பே மிக அம்சமாக இருக்கும். அபூர்வமாக இரு நிலையிலும் தெய்வங்கள் வைக்கப்பட்டு மிக அழகாகப் பராமரிக்கப்படும் வீடுகளில் இதுவும் ஒன்று.



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6

139. இது அரிவாள்மணை -- அருகாமணை. ஆனால் தேங்காய் திருகியும் அதற்கான மடலும் இணைந்தது. அநேகமாக இதுபோல் காரைக்குடியில் மட்டுமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.என் அம்மாவிடம் நாங்கள் போகும் ஊரில் பழகும் தோழியர் & பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுபோன்ற அருகாமணை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பார்கள். ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்குத் திரும்பும்போது அநேகருக்கு இம்மாதிரி அருகாமணை பார்சல் ஆகி இருக்கும். :)

அதே அரிவாள்மணை இன்னொரு கோணத்தில். இதில் திருகினால் தேங்காய் பூப்போல வரும். மிக்ஸியில் பவுடராகிவிடும். அல்லது திப்பி திப்பியாக வரும்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5


செட்டிநாட்டில் மிதிலைப்பட்டியில் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பது கேள்வியுற்று தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாதய்யர் அங்கே மாட்டுவண்டியில் சென்று அவற்றை எல்லாம் வாங்கிவந்து சேகரித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே காரைக்குடியில் திருமணத்தைப் பதிவு செய்யவும் 124. ஏடுகளையும் 125. எழுத்தாணிகளையும் போன நூற்றாண்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு 126. இசைகுடிமானம் எழுதுதல் என்று பெயர். பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும், மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் இந்தத் திருமணப் பதிவு ஏடை எழுதிக் கொள்வார்கள். ஓரம் நறுக்கப்பட்டு கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஏடும். 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.



115. இது ட்ரேதான். ஆனால் மரத்தில் செய்யப்பட்டு பறவையும் கிளையும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.



116.இது மணவறையில் உபயோகப்படுத்துவது. அரசாணிக்கால் நடுவது. முதல் நாள் இரவே பங்காளிகள் வந்து இதில்தான் கிலுவைக் கம்பையும் பாலைக்கம்பையும் ஊன்றி அரசிலைகளைச் சுற்றி வைப்பார்கள். அரசன் ஆணைக் கால் என்று பெயர். அரசனின் ஆணையோடு திருமணம் செய்விப்பதாக இதை வைப்பது

திங்கள், 20 ஜூலை, 2015

செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

செட்டி நாட்டுத் திருமணங்களில் பெண்ணுக்கு குறைந்தது 4 அலமாரிகளாவது வைப்பார்கள். தேக்கு மர அலமாரி, கண்ணாடி அலமாரி ( இதுவும் தேக்குதான் ). காட்ரெஜ் பீரோ, அடுப்படி வலை பீரோ என்று.

106. கருங்காலி மரத்தில் மரப்பெட்டகங்களும் செய்து கொடுப்பார்கள். அவற்றில் சாமான்களை வைப்பார்கள்.

107. திருமண காலங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்குக் கவரி வீசுவதுபோல இந்த விசிறியால் விசிறுவார்கள். பிரம்பு  விசிறியில் கைப்பிடி அழகாக சுற்றப்பட்டு முழுவதும் ஸாட்டின் துணியினால் வெட்டி ஒட்டித் தைக்கப்பட்டு ஜால்ரா மடிப்பு அமைக்கப்பட்டு எம்ப்ராடரி லேஸால் அழகுபடுத்தப்பட்ட கண்கவர் விசிறி இது :)

இது கொஞ்சம் சிம்பிள் பேட்டர்ன். கைபிடித்து விசிற அழகான இடைவெளியும் அதன் மேல் இதழ் போன்ற அமைப்பில் துணித்தையலும் மிக அழகு இல்லயா :)

புதன், 15 ஜூலை, 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும்.

97.அரிசி அளக்கும் படிதான் இது. இதில் க்ரோஷா நூலைக் கொண்டு பின்னல் வேலைப்பாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் விளிம்பிலும் கீழேயும் கலர் தகடுகளால் பட்டி அடித்திருக்கிறார்கள். திருமணச் சீரில் வைப்பதற்காக இந்த அலங்காரம். :)
98. இது ஒரு சின்ன பாட்டில். இதில் பாசி வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.அதுக்குள்ளே வேறு கலர் பாசிகளையும் கோர்த்து டிசைன் செய்திருக்கிறார்கள். !

வியாழன், 25 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

கிட்டத்தட்ட  40 லட்சத்துக்கு இந்த சூர்யப் பலகை ஒன்று சமீபத்தில் விலை போயிருக்கிறது. அதை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று  2 1/2 கோடிக்கு விற்பனை செய்கிறார்கள் என்று கேள்வி.

சூர்யப் பலகைகளில் பொதுமையான தன்மை சில உண்டு. தெய்வீக உருவச் சிலைகள் அமைக்கப்பட்டது சூர்யப் பலகை.  சில வேறுபாடுகளுடன் அமையும் ஆனால் நிலைப்பலகைகள் ஒவ்வொருவீட்டுக்கும் ஒவ்வொரு கதவுக்கும்கூட வித்யாசமாக அமையும். நிலைப் பலகையில் தெய்வீகச் சிலைகள், இயற்கைக் காட்சிகள், தாமரைப் பூக்கள், சூரியகாந்திப் பூக்கள், சிறுபூக்கள், பறவைகள் ( பட்சிகள் )  அமையும்.

இந்த இணைப்பைப் படித்துவிட்டு இந்தப் படங்களைப் பாருங்க. :)

http://now.rtbi.in/pudhuvayal/index.php?option=com_content&view=article&id=78&Itemid=64&lang=ta

95.  சூர்யப் பலகை.

சூர்யப் பலகை பற்றி என் ராமு மாமா விரிவாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள். இவை அனைத்தும் தேக்கில் செய்யப்பட்டவை என்பது சிறப்பு. அதுதான் தலைமுறை தாண்டியும் நீடித்து வருகின்றன. சில புதுசாக இருந்தாலும் பல பழையனவாக ஆகிவிட்டன.  வருடம் ஒரு முறையாவது பார்த்துப் பராமரித்து கரையான் இருந்தால் மருந்தடித்து பாலிஷ் செய்துவைத்தால் இன்னும் அதிக ஆண்டுகள் இவை நீடிக்கும்.

இது மெயின் நிலையில் பதிக்கப்படுவது. முகப்புக்கும் பட்டாலைக்கும் இடைப்பட்ட கதவு நிலை இதுதான்.

///1.துவார பாலகர் 2.,3,4 வள்ளி,தெய்வானையுடன் முருகன் 5. நாரதர் 6. கவரி வீசும் பெண் 7.திருமால் 8.மீனாட்சி 9.சுந்தரேஸ்வரர் 10. கவரிப்பெண் 11.பிரம்மன் 12,13,14 வினாயகரும் அவருக்குப் படையல்கள் சுமந்து நிற்கும் கணங்களும் 15 துவாரபாலகர். வாயில் நிலையில் சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் காட்டி இல்லத்திற்கு புனிதம் சேர்க்கும் அருமையான சிற்பத்தொகுதி 16. சிங்கம் , 17. சூர்யப் பலகை. ///


96. இது சாமி வீட்டு நிலைக்கதவு. அன்னப் பறவைகளும் பூக்களும்.கீழே சூரியகாந்திப் பூக்கள் போன்ற வடிவம்.

ஞாயிறு, 14 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

செட்டிநாட்டின் வீடுகளில் பெரும்பாலும் தேக்குமரம், ஆத்தங்குடிக் கல், பித்தளைத் தாழ்வாரம், பட்டியக் கல் போன்றவை சிறப்பு. கொண்டுவிக்கச் சென்றவர்கள் என்பதால் பெல்ஜியம் கண்ணாடி, மலேயாச் சாமான்கள், ரெங்கோன் ( செய்கோன் ) சாமான்கள், சிங்கப்பூர் சாமான்கள், சிலோன் சாமான்கள் அநேகர் வீடுகளில் இருக்கும். 

இது கடியாபட்டியில் உள்ள ஒரு வீட்டின் முகப்பு. முன்புறத் தோற்றம். கேரள பாணியில் சில அமைப்புகளும் முகலாய சிற்ப பாணியில் சிலவும்,கோயில் கோபுரங்கள் போன்று நடுவில் உயர்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும் முகப்புகள்.

சில வீடுகள் ஆங்கிலோ இந்திய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 
ஆல்வீடும் ஊஞ்சலும். மேலே உள்ள மேங்கோப்பு மரத்தால் ஆனது. அது முழுக்க ஓவியங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவு உள்ள 80. தொங்கு விளக்குகள் (  மங்கு ஷேட் உடன் உள்ள குண்டு பல்புகள் ). தூசி படியாமல் இருக்க 81. சுவற்றலமாரிகளில் உள்ள கண்ணாடிக்கும் மற்ற பீரோக்களுக்கும் 82. துணி உறைகள்.  83. இரட்டையாக மடிக்கப்படும் ஜன்னல் கதவுகள். தரையில் 84. ஆத்தங்குடி டிசைன் கற்கள்.

வளவுக் கதவில் 85. எனாமல் பெயிண்டிங்கில் இரட்டை மயில்.மேலே 4 எனாமல் ரோஜாக்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...