ஸாதிகா அக்காவுக்கு மிக்க நன்றி!!
பாண்டிச்சேரி இதாங்க என் சொந்த ஊர்.2006 லிருந்து புதுச்சேரின்னு மாத்திட்டாங்க.
பிறந்து,வளர்ந்த ஊர் என்பதால் எங்க ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இப்பவும் பாண்டிச்சேரியை தாண்டி வேறு ஊருக்கு போனாலும் சொர்க்கமே என்றாலும் எங்க ஊர் போல வருமான்னு பாடல் தான் ஞாபகம் வரும்.
கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதில் மிக பெருமை...
அப்புறம் இங்குள்ள ஒரே வசதி அனைத்து தெருக்களும் பீச் ரோட்டில் முடியும்.
ப்ரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலம் இது.அதனால் இன்னுக்கும் சில தெருக்களில் ப்ரெஞ்ச் பெயர்கள்தான் தெரு பெயராக இருக்கும்.கட்டிடங்களும் ப்ரெஞ்ச் முறைப்படி உயரமாகவே இருக்கும்.
எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு வரை எங்க ஊரில் தண்ணீர் பஞ்சமே வந்ததில்லைன்னு சொல்லுவாங்க அதற்க்கு காரணம் இங்கு சித்தர்கள் சமாதி அதிகம்.கடற்கரை பக்கத்திலயே இருப்பதால் இங்கு கடல் உணவுகள் தாராளமா கிடைக்கும்.
மொழி
ப்ரெஞ்ச்,தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.பிரான்சில் நடத்தப்படும் பாடத்திட்டங்களைப்போலவே இங்கு ப்ரெஞ்ச் பள்ளிக்கூடங்களும் இருக்கு.
பார்க்கவேண்டிய இடங்கள்
புதுச்சேரி கடற்கரை,ஆரோவில்,அரவிந்தர் ஆசிரமம் ( இங்கு போனாலே மனம் தானாகவே அமைதியாகி விடும்.ரொம்ப பிடித்த இடம்.மணக்குளவிநாயகர் கோவில் அருகில் இருக்கு),சுண்ணாம்பார் போட் ஹவுஸ்,பாரதி பார்க்,ரோமன் ரோலண்ட் லைப்ரரி (மிகவும் புகழ் பெற்ற நூலகம் இது),அருஞ்காட்சியகம்,பொட்டனிக்கல் கார்டன் (இப்போழுது இந்த இடம் சரியாக பராமரிக்கபடவில்லை.முன்பெல்லாம் இங்கு பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி ஊட்டியிலிருந்து செடிகள் வரவழைக்கப்பட்டு நடக்கும்),ஆங்கிலோ ப்ரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்.
உணவகங்கள்
நிறைய வெஜ்,நான் வெஜ் ஹோட்டல்கள் இருந்தாலும் இந்த ஹோட்டல்கள் எப்போழுதும் என் பேவரிட் லிஸ்டில் இருப்பவை...
இந்தியன் காபி ஹவுஸ் ( எல்லா வகை டிபன் அயிட்டங்களும்,பில்டர் காபியும் சூப்பரா இருக்கும்.சாம்பார் இட்லி மாதிரி இந்த ஹோட்டலில் பூரி சாம்பார் ரொம்ப பிடிக்கும்) முன்பு நேரு வீதியில் இருந்தது.இப்போழுது இடத்தை மாற்றிவிட்டார்கள்.
அரிஸ்டோ ஹோட்டல் நான் வெஜ் ஐயிட்டங்கள் சூப்பரா இருக்கும்.( இங்கு பிரியாணியும்,பரோட்டா சால்னாவும் நன்றாக இருக்கும்..)
ஹோட்டல் சற்குரு ( 5 ஸ்டார் ஹோட்டல்) அனைத்தும் நன்றாக இருக்கும்.மிஷன் வீதியில் இருக்கும் கிளையில் இட்லி ரொம்ப சூப்பரா இருக்கும்.சர்வீஸும் நல்லா இருக்கும்.)
துணி,நகை கடைகள்
பட்டுதுணிகள் எடுக்க புகழ் பெற்ற நம்பிக்கையான கடை முத்து சில்க் ஹவுஸ்.இதனருகில் தான் ஹோட்டல் அரிஸ்டோ இருக்கு.
தங்க மாளிகை நகை கடை முன்பு நன்றாக இருந்தது.இப்போ தரம் சரியில்லை.
அடுத்தது ஸ்ரீ லஷ்மி ஜூவல்லரி (இந்த கடையின் ஒரு கிளை தான் பிரான்சில் இருக்கு)
ஸ்ரீ வள்ளி விலாஸ் இங்கும் நகையின் தரம் நன்றாக இருக்கும்.
புகழ்பெற்ற ஜிப்மர்(JIPMER) மருத்துவமனையும் இங்குதான் இருக்கு...
கோவில்கள்
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ் பெற்ற கோவில் இது.இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோவில் இது. விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பதும் இங்கு மட்டுமே!!
இக்கோவிலின் கருவறைக் கோபுரம் தற்போது பொன்னால் வேயப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், திருமண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் இங்கு வந்து வழிபடுவது எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.
மற்றும் காமாஷி அம்மன் கோவில்,பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்,பிரதியங்கிராதேவி கோவில் (இங்கு சாமியை தரிசனம் செய்ய அண்டர்கிரவுண்டில் செல்ல வேண்டும், அம்மன் சிலையும் மிக பிரம்மாண்டமா இருக்கும்),வேதபுரீஸ்வரர் கோவில்,சுப்ரமணிய சுவாமி கோவில்,வரதராஜப் பெருமாள் கோவில்,செங்கழுநீரம்மன் கோவில் (இங்கு ஆடிமாதம் 5ம் வெள்ளியில் தேர்த்திருவிழாவும்,6ஆம் வெள்ளியில் முத்துப்பல்லாக்கும் மிக பிரபலமான ஒன்று),சுவாமி சித்தானந்தர் கோவில்.
ஜூம்மா மசூதி இதுவும் புகழ் பெற்ற மசூதி.
தேவாலயங்கள்
Immaculate Conception Cathedraல்(சம்பா கோவில் என்று சொல்வாங்க.அன்னை தெரேசா பாண்டிச்சேரி பயணத்தின் போது வந்துள்ளார்.),தூய இருதய ஆண்டவர் கோவில் (2007ல் தான் இந்த சர்ச்சில் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது)
வில்லியனூர் லூர்து மாதா கோவில் ( பாண்டிச்சேரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு.ப்ரான்சிலிருந்து லூர்து மாதா சிலை கொண்டு வரப்பட்ட லூர்து மாதா கோயில் இது).
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் எங்க ஊரைப்பற்றி.....
முன்பெல்லாம் சின்ன வயசுல என் சொந்த ஊர் எதுன்னு கேட்கும் போது பாண்டிச்சேரின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பாங்க,எனக்கு அப்போ எதுவும் புரியல.போகபோகதான் புரிந்தது.இப்போ புரிந்திருக்குமே உங்களுக்கெல்லாம்......
படங்கள் உதவி - கூகிள்!!